திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணையதளம், தொலைத்தொடர்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மிகவும் உன்னிப்பாகவும், கவனமாகவும் கவனிக்கவேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே செயல்பட்டுவந்த கரோனா கட்டுப்பாட்டு அறையை இணையதளம், தகவல் தொடர்பு வசதிகளுடன் புதுப்பித்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையில் தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நோயாளிகளின் விவரங்களும் கரோனா சோதனை மையங்களிலிருந்து பெறப்பட்டு, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அங்கு பணியிலிருக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை இதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள் வழியாக நேரிடையாக தொடர்பு கொள்வார்கள். அவர்கள் சிகிச்சை எடுக்கும் முறை, அவர்கள் வெளியூர் சென்றிருந்த விவரம், அவர்களிடம் நேரடி தொடர்பிலிருந்த நபர்களின் விவரம், அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட விவரம் போன்ற 10-க்கும் மேற்பட்டோரின் தகவல்களை இந்த இணையதளத்தில் நேரிடையாக பதிவு செய்வார்கள்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அனைவரும் அடுத்து வரும் 14 நாட்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள். தினந்தோறும் அவர்களின் உடல்நிலை, உட்கொள்ளும் மருந்துகள்போன்ற அனைத்து விவரங்களையும் மென்பொருள் வாயிலான தொலைபேசியில் கேட்டு அவர்கள் தெரிவிக்கும் அடிப்படை விவரங்களையும் பதிவு செய்வார்கள்.
இதனால் மாவட்ட அளவில் அனைத்துப் பகுதிகளுக்கும் தேவையான கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள், தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப் பட்ட நபர்கள் அனைவரும் அடுத்து வரும் 14 நாட்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள்.