புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் உலகக் கவிஞர் தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சங்கப் புலவர்களின் நினைவுத் தூண்களில் மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.சங்கப்புலவர்களில் தனித்த சிறப்போடு விளங்கியவர்தென்காசி மாவட்டம் மாங்குடி கிராமத்தில் பிறந்த மாங்குடிமருதனார். இவர் இயற்றிய 13 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ளன.
அகநானூறு, புறநானூறு, நற்றிணை, மதுரைக்காஞ்சி ஆகிய சங்க இலக்கியங்களில் இவரது பாடல்கள் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. இத்தகு சிறப்புகளை உடைய மாங்குடி மருதனாருக்கு 1992 -ம் ஆண்டு தமிழகஅரசால் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. தமிழ்க் கவிஞர்கள் தினத்தை முன்னிட்டு மாங்குடியில் உள்ள மாங்குடி மருதனார் நினைவுத் தூணுக்கு சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குநர் வ.சுந்தர், சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் பி.முருகன், வட்டாட்சியர் ரவிக்குமார், கவிஞர் பேரா,மாங்குடிமருதனார் மன்ற நிர்வாகிகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.