Regional02

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கானவாக்கு எண்ணிக்கை ஆயத்தப் பணிகள் மும்முரம் - :

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 66, 417, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 93,104, மூன்றாம் பாலினத்தவர் 283 என 23 லட்சத்து 59,804 வாக்காளர்கள் உள்ளனர். இதில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 8 லட்சத்து 26,798 ஆண், 8 லட்சத்து 17,255 பெண், மூன்றாம் பாலினத்தவர் என 16 லட்சத்து 44,085 பேர் வாக்களித்துள்ளனர். 7 லட்சத்து 15, 719 பேர் வாக்களிக்கவில்லை. ஆண்கள் வாக்கு சதவீதம் 70.88, பெண்கள் வாக்கு சதவீதம் 68.49. மூன்றாம் பாலினத்தவர் 11.30 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 69.67சதவீதம் வாக்குகள் பதிவாகி யுள்ளன. கடந்த முறையைபோலவே, இந்த முறையும் காங்கயம் தொகுதியில் அதிக சதவீத வாக்குகள்பதிவாகின.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, "திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. 1500 அரசு ஊழியர்கள், 1000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் 3000 பேர் வாக்கு எண்ணும் பணி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான கரோனா பரிசோதனை, கடந்த 2நாட்களாக திருப்பூர் மாநகர் மற்றும்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் களத்தில்உள்ளனர். 14 டேபிள்கள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 2 டேபிள்கள் அமைக்கப்பட்டு தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.

தாராபுரம் (தனி) தொகுதி 25 சுற்றுகள், காங்கயத்தில் 27, அவிநாசி (தனி) தொகுதியில் 29, திருப்பூர் வடக்கு 39, திருப்பூர் தெற்கு 29, பல்லடம் 40, உடுமலைப்பேட்டை தொகுதி 28 சுற்றுகள், மடத்துக்குளம்26 சுற்றுகள் என 8 தொகுதிகளை 243 சுற்றுகள் முடிவு செய்ய உள்ளன. இதில் தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், திருப்பூர் தெற்கு, உடுமலை தொகுதிகளின் சுற்றுகள் குறைவாக இருப்பதால், மேற்கண்ட தொகுதிகளின் முடிவுகள் முன்கூட்டியே தெரியவரும். திருப்பூர் வடக்கு, பல்லடம் தொகுதிகளின் சுற்றுகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இவ்விரு தொகுதிகளின் முடிவுகள் சற்று தாமதமாக தெரியவரும்" என்றனர்.

SCROLL FOR NEXT