Regional01

கரோனா விதிமீறிய நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு ‘சீல்’ : சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

செய்திப்பிரிவு

சேலத்தில் கரோனா விதிமீறிய நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது என சேலம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

சேலம் மாநகராட்சியில் 79 தடை செய்யப்பட்ட பகுதி களில் அறிவிக்கப்பட்டு, கரோனா தடுப்பு பணிகளை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 680 களப்பணியாளர்கள் நியமிக்கப் பட்டு, கரோனா தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சேலம் அஸ்தம்பட்டி கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் மற்றும் கரோனா பரிசோதனை முகாமை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். பின்னர் ஆணையர் கூறியதாவது:

சேலம் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி பணியாளர்களுக்கு சளி தடவல் பரிசோதனை முகாம் நடந்தது. இதில், 189 பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 1,965 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்தபோது, கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு, மூடி சீல் வைக்கப்பட்டது.

விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக பயணிகளை ஏற்றி வந்த இரு தனியார் பேருந்துகளுக்கும், ஐந்து ரோடு பகுதியிலுள்ள தனியார் மாலுக்கும் தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 66 தனி நபர்களுக்கு தலா ரூ.200, 34 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 என மொத்தம் ரூ.50 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT