Regional02

ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் பகுதிகளில் - பெண், முதியவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1.39 லட்சம் பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி பாரதி(48). இவர், ஆர்.கே.பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தொடர்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

பாரதி, நாள்தோறும் வங்கியில் பணம்பெற்று, ஓய்வு ஊதியம் மற்றும் ஊரக வளர்ச்சி மேலாண்மை ஊதியம் போன்றவற்றை பயனாளிகளுக்கு வழங்கிவருவது வழக்கம். அந்த வகையில், பாரதி நேற்று முன்தினம் வங்கியில் ரூ.79,100 பணத்தைப் பெற்றுக் கொண்டு, வங்கி அருகே நிறுத்தியிருந்த தன் இரு சக்கர வாகனத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், சாலையில் பணம் கிடப்பதாகக் கூறி, பாரதியின் கவனத்தை திசை திருப்பி, இருசக்கர வாகனத்தில் மாட்டியிருந்த பணம், மொபைல் போனுடன் கூடிய கைப்பையை எடுத்துக் கொண்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அதேபோல், திருத்தணி அருகே உள்ள களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(53). விவசாயியான இவர், நேற்று முன்தினம், திருவள்ளூர் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தன் கணக்கில் இருந்து ரூ.60,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு, வங்கி வாசலுக்கு வந்தார்.

அப்போது, பன்னீர்செல்வத்தைப் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள், பன்னீர்செல்வத்தின் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, அவர் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இவ்விரு சம்பவங்கள் குறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆர்.கே.பேட்டை மற்றும் மப்பேடு போலீஸார், மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT