வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்த சான்றிதழ்களை வாக்கு எண்ணும் நாளில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை பணியை மேற்பார்வையிடும் அலுவலர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான பயிற்சிக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் பேசியதாவது:
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கரோனா தடுப்பூசியினை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், அனைவரும் வாக்கு எண்ணும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன்னதாக, கரோனா பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜை, 1 தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜை என 11 தொகுதிகளுக்கும் மொத்தம் 165 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு அந்தந்த தொகுதிகளுக்கு தனியாக மேஜைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், வாக்குகள் எண்ணும் உதவியாளர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர் , கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையில் இருந்து கொண்டு வந்து, மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் அலுவலர்கள் 2-ம் தேதி காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வர வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்று வாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மேஜைக்கும் உரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகளை எடுத்து வருவதற்கென நியமிக்கப்பட்டுள்ள கிராம உதவியாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக பிரத்யேக வண்ணங்களில் தொகுதியின் பெயர், அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜை எண் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ள பேட்ஜ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.