Regional02

வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் : ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் விளக்கம்

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு, சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற உள்ளது. 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை 152 மேஜைகளில் நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் வேட்பாளர்கள், முகவர்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் மற்றும் கையுறை அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கரோனா பரிசோதனைச் சான்று வைத்திருக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பேனா, பென்சில், வெள்ளைத்தாள் மற்றும் படிவம் 17 சி- நகலினை எடுத்து வரலாம். முகவர்களுக்கு வழங்கப்படும் அடையாள வில்லையில், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மேஜை எண் மற்றும் அவரது கையொப்பம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். தேர்தல் பார்வையாளர்கள் நீங்கலாக மற்றவர்கள் செல்போன், ஐ பேடு, மடிக்கணினி போன்ற மின்சாதனப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. கண்டிப்பாக தீப்பெட்டி, புகையிலைப் பொருட்கள், பற்றவைப்பான், குட்கா பொருட்கள் மற்றும் இதர குளிர்பானங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வாக்கு எண்ணிக்கை முடிவுற்று ஒவ்வொரு சுற்று வாரியாக புள்ளிவிவரம் தயார் செய்து தேர்தல் பார்வையாளரின் ஒப்புதல் பெற்ற பின்னரே அடுத்த சுற்றுக்கு அனுமதிக்கப்பட வேண்டும், என்றார்.

SCROLL FOR NEXT