திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகள் இல்லாமல் மின்னணு முறையில் அலுவலக பணிகளைப் கையாளும் மென்பொருள் திட்டத்தை ஆட்சியர் வே. விஷ்ணு அறிமுகம் செய்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நாள் தோறும் கையாளப்படும் அலுவலக கோப்புகள் அனைத்தும் இ- ஆபிஸ் என்ற மென் பொருள் மூலமாக செயல்படும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்துவைத்த ஆட்சியர் கூறியதாவது:
ஆட்சியர் அலுவலகத்தில் இனி கோப்புகள் எதுவும் நேரடியாக அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பாமல், அதற்கு பதிலாக கோப்புகள் அனைத்தும் தேசிய தகவலியல் மையத்தின் இ-ஆபிஸ் என்ற மென்பொருள் மூலம் மட்டுமே கையாளப்படும்.
இதன் முதல் கட்டமாக ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கணக்குப் பிரிவு ,சட்டம் மற்றும் ஒழுங்கு, முதலமைச்சர் நிவாரணப் பிரிவு, வெடிபொருள் உரிமம், பேரிடர் மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இது செயல் படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விரைவில் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள இதர பிரிவுகளும் மாவட்டத்திலுள்ள சார்-ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களும் இது போன்ற செயல்பாடுகளுக்கு மாற்றப்படும்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற சிக்கலான நேரத்தில் பணியாளர்கள் கோப்புகளை நேரடியாக கையாளத்தேவையில்லை. கரோனாவிலிருந்து விடுபட அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் கோப்புகளை விரைந்து அனுப்பி முடிவுகளை எடுக்கவும் இந்த மென் பொருள் உபயோகமாக இருக்கும்.
வருங்காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை பணி யாளர்கள் தொடர்வதற்கும் இந்த மென் பொருள் ஒரு முன்னோடியாக இருக்கும்.
இந்த மென்பொருள் சம்பந்தமாக அனைத்து அலுவலர்களுக்கும் தேவையான பயிற்சி மாவட்ட மின்னணு மேலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார் ,தேசிய தகவலியல் மைய அலுவலர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார், ஆட்சியர் அலுவலக பொதுமேலாளர் வெங்கடாசலம், வட்டாட்சியர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற சிக்கலான நேரத்தில் பணியாளர்கள் கோப்புகளை நேரடியாக கையாளத்தேவையில்லை. கரோனாவிலிருந்து விடுபட அனைத்து பணியாளர்களின் பாதுகாப்பு இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.