சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்கள் மற்றும் வேட்பாளர், முகவர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் கரோனா பரிசோதனை முகாம் நடந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 2-ம் தேதி நடக்கவுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 2,190-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் மற்றும் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களுக்கு அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில் அந்தந்த தொகுதிகளில் கரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சேலம் மேற்கு தொகுதிக்கு சேலம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், சேலம் தெற்கு தொகுதிக்கு சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் கரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதேபோல மற்ற தொகுதிகளிலும் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய முகாமில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். முகாமில் பங்கேற்று பரிசோதனை செய்து கொள்ளாதவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் மருத்துவப் பரிசோதனை செய்து அதன் சான்றிதழை ஒப்படைத்து வாக்கு எண்ணும் பணியில் கலந்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.