தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நாகராஜ், மாவட்டப் பொருளாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித் தொகை மிகத் தாமதமாக வழங்கப்படுகிறது.சில நேரம் பல மாதங்கள் சேர்த்து மொத்தமாகவும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் உதவித் தொகை முறையாக வழங்கப்படாததால் கந்து வட்டிக்குப் பணம் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. எனவே, மாதம்தோறும் முறையாக உதவித் தொகை வழங்கக்கோரியும், கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.