புதுக்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தின ருக்கு சக காவலர்கள் நேற்று ரூ.17 லட்சம் நிதியுதவி செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கே.ரமேஷ்(49). இவர், வெள்ளனூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்தார். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த மாதம் பேருந்து மோதி ரமேஷ் உயிரிழந்தார். இந்நிலையில், ரமேஷூடன் கடந்த 2002-ல் பணியில் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் காவலர்களிடம் இருந்து ரமேஷின் குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக ரூ.17 லட்சத்து 25 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது.
இதில் ரூ.16 லட்சத்தை பிரித்து அவரது தாய் பூவாயி, மனைவி கலைவாணி, மகன் கபிலன், மகள் காவியா ஆகியோரது பெயரில் அஞ்சலகத்தில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு, அதற்கான பத்திரங்கள் நேற்று அவர்களிடம் வழங்கப்பட்டன. மீதமுள்ள ரூ.1.25 லட்சம் ரொக்கம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர்.