தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 51 பேர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதற்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எந்த சூழ்நிலையிலும் திறக்க அனுமதிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டி கிராமத்தில் சிலர் நேற்றுமுன்தினம் மாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நியாயவிலைக் கடை முன் அமர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எஸ்பி எடுத்துக் கூறியதை தொடர்ந்து இரவு 8 மணியளவில் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதேபோல், தூத்துக்குடி மட்டக்கடை புதுத்தெரு சந்திப்பு பகுதியில் அமர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்நிலையில் இந்த போராட்டங்கள் கரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிகளை மீறியும், எந்தவித அனுமதியும் பெறாமல் நடந்ததாகவும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் மீது சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், புதுத்தெரு மக்கள் மீது வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஐஸ்டின் சாமுவேல்ராஜ் ஆகியோர் புகார் அளித்தனர்.
பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் நடத்தியதாக மக்கள்அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்தி (52), ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணாதேவி (32), மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் சந்தோஷ்ராஜ் (24), புதுத்தெருவை சேர்ந்த மரிய ஹன்ஸ் (41) உள்ளிட்ட 51 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.