கரோனா பரவலை தடுக்கும் வகையில் மேலப்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையை திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் காலவரையின்றி மூடியுள்ளது. இதனால் சந்தைக்கு நேற்று வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இச்சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வாங்குவதற்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஏராளமானோர் வருவார்கள். கடந்த ஆண்டில் கரோனா பரவல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் சந்தைமூடப்பட்டிருந்தது. ஜூன் மாதத்துக்குப்பின் செவ்வாய்க்கிழமைதோறும் கோழிகள் விற்பனை நடைபெற்று வந்தது. பின்னர் படிப்படியாக ஆடு, மாடுகள் விற்பனை தொடங்கியது.
தற்போது கரோனா 2-வது அலைவேகமாக பரவும் நிலையில் இச்சந்தையில் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். சந்தைக்குவருவோர் பலரும் முககவசம்அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்ததால் அபராதமும் விதித்தனர். ஆனாலும் கரோனா தொற்றுதடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அலட்சியம் நீடித்தது. இதனால் கால்நடைச் சந்தையை காலவரையின்றி மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவுசெய்தது. அதன்படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகிபிரேமலதா, சுகாதார அலுவலர் சாகுல்ஹமீது, சுகாதார ஆய்வாளர் சங்கரநாராயணன், உதவி செயற்பொறியாளர் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அதிகாலையில் சந்தையை மூடி சீல்வைத்தனர். சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது குறித்த அறிவிப்பு பதாகையும் பிரதான நுழை வாயிலில் கட்டப்பட்டது.
இதுகுறித்து தெரியாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் கால்நடைகளை வாங்குவதற்காக சந்தைக்கு வாகனங்களில் வந்தனர். சந்தை மூடப்பட்டது குறித்து அவர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்து, திருப்பி அனுப்பினர். சந்தையையொட்டி சாலையிலும் கால்நடைகள் விற்பனையை அதிகாரிகள் தடுத்து வியாபாரிகளை கலைந்துபோக செய்தனர். இதனால் வியாபாரிகள் ஏமாற்றத்தோடு திரும்ப நேரிட்டது.
ஊழியருக்கு கரோனா