Regional01

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் - மருத்துவ பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் தயாரிப்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ திரவ இயக்க உந்தும வளாகம் இயங்குகிறது. இந்த மையத்தில் இந்திய தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் இயந்திரம் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிநடைபெறுகிறது. அவ்வாறுதயாரிக்கப்படும் இயந்திரங்களை இயக்கி வெள்ளோட்டமும் இங்கு நடத்தப்படுகிறது. மேலும் கிரையோஜெனிக் இயந்திரங்களுக்கான எரிபொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரம்மாண்டமான திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கூடம் இங்கு அமைந்துள்ளது. ராக்கெட் எரிபொருளுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தில் மருத்துவ ரீதியான பயன்பாட்டுக்கு ஆக்சிஜன் தயாரிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருவதால் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த மையத்தில் இருந்து முதல் கட்டமாக 14 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக மருத்துவ சேவை கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசுமருத்துவமனைக்கு 8 டன்,தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு 6 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக்சிஜன் போதுமான அளவு இருப்பு உள்ளதால் அண்டை மாவட்டங்களுக்கு ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT