Regional03

கோவையில் கரோனா பரவல் காரணமாக - நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய கட்டுப்பாடு :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் காரணமாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைய மனுதாரர்கள், வழக்கறிஞர்களுக்கு நேற்றுமுதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கோவை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆர்.சக்திவேல் அனைத்து நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தரப்பினர், எதிர் தரப்பினர் ஆகியோர் ஒப்புக்கொண்ட வழக்குகளை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்கள் சம்மதம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அதன்பிறகே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஜாமீன் கோரி மின்னஞ்சலில் மனு தாக்கல் செய்யும் நடைமுறை மறு உத்தரவு வரும் வரை தொடரும். வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் வாதங்களை முன்வைக்க விரும்பும் வழக்கறிஞர்கள், தங்கள் விருப்பத்தை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். அதன்பிறகே, அதற்கான நேரம், தேதி ஆகியவை மின்னஞ்சல் வழியாக தெரிவிக்கப்படும்.

மாவட்ட நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றத்தில் புதிய மனுக்களை தாக்கல் செய்வதற்காக நுழைவுவாயில் எண் 4 அருகே தனித் தனி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த பெட்டிகளில் மனுக்களை போடலாம். வரும் 30-ம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். சாட்சியம் அளிக்க வரும் மனுதாரர்கள் மட்டுமே நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 65 வயதுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் வருவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் வீடியோ கான்ஃபரன்சிங் வசதியை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முகக் கவசம் அணியாதவர்கள் யாரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நீதிமன்றத்தின் அனைத்து நுழைவுவாயில்களிலும் உடல் வெப்ப பரிசோதனை நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT