ஈரோடு மாநகராட்சி அலுவலகத் தில் 7 நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தை ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது
ஈரோடு மாநகர் பகுதியில் 10 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் 672 பேர் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீத முள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு நகரில் கரோனா பரவல் அதிகம் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நடமாடும் கரோனா பரிசோதனை வாகனங்கள் சென்று, அந்தப் பகுதி மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனையில் சாதாரண காய்ச்சல் என்றால் அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்களுக்கு, சளி மாதிரிசேகரிக்கப்பட்டு, கரோனா பரி சோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். சோதனை முடிவு வரும்வரை, அந்த நபர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிவில் தொற்று ஏற்பட்டால் அந்த நபர் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்துச் செல்லப்படுவார். அதில் முழு உடல் பரிசோதனை செய்து, அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெறலாமா அல்லது மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறலாம் என்று முடிவு செய்யப்படும். இத்தகைய நடமாடும் கரோனா பரிசோதனை வாகனத்தில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இருப்பார்கள் என்றார்.