Regional02

சேலத்தில் பிளஸ் 1 சேர்க்கைக்கு - நுழைவுத் தேர்வு நடத்த முயன்ற பள்ளிக்கு சிஇஓ எச்சரிக்கை :

செய்திப்பிரிவு

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த முயன்ற அரசு உதவி பெறும் பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்துதேர்வு எழுத வந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேலம் நான்கு ரோட்டில் அரசு உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நேற்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று பள்ளிக்கு பெற்றோர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.

மேலும், அவர்கள் தேர்வு எழுத சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, பள்ளியின் முதல்வரை அலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார். மேலும், கரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அரசு வழிகாட்டுதலை மீறி நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்றும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் எச்சரித்தார்.

இதையடுத்து, பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரை பள்ளி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT