Regional03

7 மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் - சிங்கப்பூர் சரக்கு கப்பலை நிறுத்தி வைக்க வேண்டும் : அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை

செய்திப்பிரிவு

சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பல் மோதி 7 மீனவர்கள் உயிரிழந்தது தொடர்பான வழக்கு முடியும் வரை அந்த கப்பலை மங்களூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்றுவெளியிட்ட அறிக்கை:

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரப்பா என்ற மீன்பிடி படகில், கடந்த 11-ம் தேதி தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேரும் மேற்கு வங்க மீனவர்கள் 7 பேரும் என 14 பேர் மீன்பிடிக்க சென்றனர். அப்போது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்படுத்தியதில் 7 மீனவர்கள் உயிரிழந்த நிலையிலும், 2 மீனவர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 மீனவர்கள் மீட்கப்படவில்லை.

அரசு கூடுதலான முன் முயற்சிகளை மேற்கொண்டு 5 மீனவர்களை மீட்க வேண்டும், இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடுவழங்கவும் உயிருடன் மீட்கப்பட்டமீனவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் அறிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.

கடலில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் திசைமாறிப் போகும் மீனவர்களை மீட்பு பணிக்கென நவீன கடற்படை ஒன்றை மத்திய அரசு தொடங்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம். மேலும் விபத்து நிகழ்த்திய சிங்கப்பூர் கப்பல் மீது வழக்கு தொடர்ந்து, வழக்கு முடியும் வரை கப்பலை மங்களூர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT