வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடியது.
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவுக்காக வைகை அணை யிலிருந்து தண்ணீர் திறந்து விடப் படும். வைகை ஆற்று நீரில்தான் கள்ளழகர் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கரோனா தொற்றால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தொடர்ந்து சித்திரைத் திருவிழாவை ரத்து செய்து உள் விழாவாக கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது.
அதனால், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியும் ரத்தானது. ஆனாலும், சித்திரைத் திருவிழாவுக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் வழக்கம்போல் ஏப். 24-ம் தேதி வைகை அணையிலிருந்து 1,000 கன அடி திறந்துவிடப்பட்டது.நேற்று இந்த தண்ணீர் 300 அடியாகக் குறைக்கப்பட்டது.இந்தத் தண்ணீர் நேற்று மதுரை வைகை ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘வைகை அணை நீர்மட்டம் 62 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. ஆனாலும், குடிநீர் தேவை, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க தண்ணீர் திறக்கப்பட்டது,’’ என்றனர்.