Regional02

கரோனா ஊரடங்கு காரணமாக - பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் வேதனை :

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு காரணமாக பட்டுக்கூடு விலை சரிந்து வருவதால் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள், கர்நாடக மாநிலம் ராம்நகர் மற்றும் சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காரணமாகவும், தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு காரணமாகவும் பட்டுக்கூடுகளின் விலை சரிந்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு பட்டு விவசாயிகள் சங்க தலைவர் சண்முக சுந்தரமூர்த்தி கூறிய தாவது:

ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செலவானது ரூ. 350 ஆகிறது. கடந்த, 3 மாதத்துக்கு முன்பு ஒரு கிலோ ரூ.525- க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்டுக்கூடு விலை ரூ.400-க்கும் கீழ் வந்துவிட்டது. முழு ஊரடங்கு வந்தால், இன்னும் விலை சரிவை சந்திக்கும். கரோனா பரவல் காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக பட்டுக்கூடு வாங்குவதை, வியாபாரிகள் பெருமளவில் குறைத்துள்ளனர்.

விளைந்த பட்டுக்கூட்டை, 5 நாட்களுக்கு மேல் வைத்திருந் தால், பட்டுப்புழு கூட்டைவிட்டு வெளியே வந்து, கூட்டில் நூல் எடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, உற்பத்தி செய்யப்பட்ட பட்டுக்கூட்டை விவசாயிகள் கட்டாயம் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டுக்கூடு விலை சரிந்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல குறைந்த பட்ச ஆதார விலையை பட்டுக்கூட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT