தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அடுத்த ஆலமரத்தூர் வீரமாத்தி அம்மன் கோயிலில் சித்ராபவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.
பென்னாகரம் வட்டம் பெரும்பாலை அடுத்த ஆலமரத்தூரில் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடு நடக்கும். கடந்த ஆண்டில் சித்ரா பவுர்ணமியின்போது கரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அப்போது சிறப்பு வழிபாடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் கரோனா தடுப்பு தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேற்று சிறப்பு பூஜைகளுடன் சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது.
இதற்காக, நாகாவதி ஆற்றங்கரை பகுதியில் இருந்து பால்குடம் மற்றும் தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது. மேலும், வாத்தியங்கள் முழங்க சக்தி கரக நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் குறைவான பக்தர்களே பங்கேற்றனர். இறுதி நிகழ்வாக அம்மனுக்கு 11 வகை அபிஷேக பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு நடந்தது.