ஈரோடு மாவட்டத்தில் உள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அதனை மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு தொழிற்சாலை களில் தற்போது இருப்பில் உள்ளதிரவ ஆக்சிஜன் மற்றும் தயாரிக்கப்படவுள்ள திரவ ஆக்சிஜனை நாடெங்கும் உள்ள கரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான, தடையில்லா மருத்துவ ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவித்துள்ளது.
எனவே, மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்சிஜனை மருத்துவப் பயன்பாடன்றி, வேறு எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை தற்போது இருப்பிலுள்ள அனைத்து திரவ ஆக்சிஜனை, அரசின் மருத்துவ பயன்பாட்டிற்கு மட்டுமே வழங்கவேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்து திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், தங்களது உற்பத்தி திறனை அதிகப்படுத்தி மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மற்றும் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மேற்கண்ட நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். திரவ ஆக்சிஜன் மருத்துவ பயன்பாடல்லாமல், வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது தொடர் பாக எந்தவொரு தொழிற் சாலைக்கும் விதி விலக்கு அளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.