திருச்சி/ தஞ்சாவூர்: ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், அந்த ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி திருச்சியில் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா ஆகியோர் பேசினர்.
விசிக மாநகர் மாவட்ட துணைத் தலைவர் லாரன்ஸ், தமிழ்ப் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளர் ரமணா மற்றும் மக்கள் உரிமை மீட்பு இயக்கம், மக்கள் உரிமை கூட்டணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சையில் 10 பேர் கைது: இதே கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் ரயிலடியில் மாநகர ஒருங்கிணைப்பாளர் தேவா தலைமையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொருளாளர் காளியப்பன் பேசினார். இதில், மகஇக மாநகரச் செயலாளர் ராவணன், ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.