திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினர். 
Regional01

மறு தேர்தல் நடத்தக்கோரி - புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ஆட்சியைஅமல்படுத்தி, மறு தேர்தல்நடத்தக் கோரி திருநெல்வேலி,தென்காசியில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் தங்க ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதேபோல், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும் மாவட்டச் செயலாளர் இன்பராஜ்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னர், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் அக்கட்சிநிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், “தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குரிமையை விலைபேசும் ஜனநாயக விரோதப்போக்கு உச்சகட்டத்தை எட்டியது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரூ.20 கோடி முதல் 100 கோடிவரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சில கட்சிகள் செய்த இந்தச் செயல் ஜனநாயக படுகொலையாகும். தேர்தலை முறையாக நடத்த வேண்டிய முழு பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு.இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடத்தி யாரையாவது தேர்ந்தெடுத்து தேர்தல் ஆணையம் அறிவித்தால் இதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே, மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். தமிழகத்தில் 6 மாதம் முதல் ஓராண்டு வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தி, மறு தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT