சீவலப்பேரி கோயில் பூசாரி கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தாக்கலான மனு குறித்துநெல்லை எஸ்.பி. பதிலளிக்கஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டை யைச் சேர்ந்த சுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
சீவலப்பேரி சுடலைமாடசாமி கோயிலில் எங்கள் சமூகத்தினர் பூசாரியாக உள்ளோம். சீவலப்பேரியில் பெரும்பான்மையாக வாழும் மற்றொரு சமூகத்தினர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதலில் என் சகோதரரும், கோயில் பூசாரியுமான சிதம்பரம் என்ற துரை கடந்த 18-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவும், கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் எல்லையை முடிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி ஜி.இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக நெல்லை எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன்மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.