கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி யோகாசனம் மூலமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இளைஞர் நல ஒருங்கிணைப்பாளர் ராமச் சந்திரன் தலைமை வகித்தார். அரசு மருத்துவர் பாலமுரளி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சக்தி வரவேற்றார். விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் நீதிபதி கிருபாநிதி தொடங்கி வைத்தார்.
61 வயதான தங்கவேலு என்பவர், தனது கால்களில் கயிற்றை கட்டிக் கொண்டு தலை கீழாக தொங்கி சிரஸாசனம் செய்தார். அவரது முயற்சி 20 நிமிடங்கள் நீடித்தது. அப்போது அவர், கரோனா தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கபசுர நீர் குடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.