தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் விற்பனை நேரம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு இரவு 9 மணி வரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் நேற்று இயங்கவில்லை. டாஸ்மாக் கடைகள் இயங்காத காரணத்தால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பகல் 12 மணி முதலே மது அருந்துவோர் மதுபானங்களை வாங்க வந்தனர். நீண்ட வரிசையில் நின்று 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர்.
இதனால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.252.48 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடி, கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடி,சேலம் மண்டலத்தில் ரூ.47.79கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.