முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், உடுமலை -மூணாறு சாலையில் நேற்று காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மூணாறு செல்லும் சாலை உள்ளது.ஒன்பதாறு சோதனைச் சாவடி முதல் சின்னாறு வரை அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன. இவ்விரு வனப் பகுதியையும் பிரிக்கும் இடமாக மூணாறு சாலை உள்ளது. ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்ல சாலையை விலங்குகள் கடப்பது இயல்பு.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கேரளாவில் இருந்து சின்னாறு வழியாக தமிழகம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல, உடுமலையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது.
இதனால், மூணாறு சாலை காலை முதலே வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது, ரோந்துப் பணிக்காக மூணாறு சாலையில் வனத்துறையினர் சென்றபோது, பல இடங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையில் சுற்றித்திரிந்ததை கண்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "பொதுவாக பகலில் வன விலங்குகள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். நேற்று வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டதால், தண்ணீர்குடிப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வன விலங்குகள் சென்றன.மனிதர்களால் எந்தவித இடையூறுகளும் இன்றி காட்டு யானைகள் சாலையில் உலா வந்தன. வரும் நாட்களில் பொது போக்குவரத்து செயல்படும்போதும், வாகன ஓட்டிகள் வன விலங்குகளுக்கு இடையூறு இல்லாத வண்ணம் இருக்க வேண்டும்" என்றனர்.