Regional03

கிணத்துக்கடவு ஒன்றியத்துக்குட்பட்ட - ஊராட்சிகளில் வரிகளை குறைக்க மக்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

கிணத்துக்கடவு ஒன்றிய கிராமங்களில் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டிபாளையம், செட்டிக்காபாளையம் தேவனாம்பாளையம், காட்டம்பட்டி, கோவில்பாளையம், மன்றாம்பாளையம், முள்ளுப்பாடி, பனப்பட்டி, பெரியகளந்தை, சூலக்கல், வடசித்தூர் உள்ளிட்ட 34 ஊராட்சிகள் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம்கரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி மற்றும் குடிநீர் வரிகளை பொதுமக்கள் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு பின்னர், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், போதியவேலைவாய்ப்புகள் கிடைக்காததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சிரமப்பட்டனர்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான வீட்டு வரியாக குறைந்தபட்சம் 100 ரூபாயும், குடிநீர் வரியாக 600 ரூபாயும் ஊராட்சிகள் வசூலிக்க தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டுக்கான வரியையும் சேர்த்து ஒரு வீட்டுக்கு சுமார் ரூ.1400 வரை செலுத்த வேண்டியுள்ளது. வரி வசூல் செய்ய ஊராட்சிப் பணியாளர்கள் அணுகும்போது வரிகளை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்போது, தேர்தல் அறிவிக்கப் பட்டதால் ஊராட்சிகளில் வரியினங்கள் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்படுமோ என மக்களிடம் அச்சம்ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டுவரி, குடிநீர் வரிகளை குறைக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT