வால்பாறை நகரில் சேகரிக்கப்படும் குப்பை, ஸ்டேன்மோர் சாலையில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.
இதனால் அப்பகுதி வழியாகசெல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அப்பகுதியில் உள்ள கழிவுகளில் நெகிழி, இறைச்சிக் கழிவுகள்,காய்கறிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் கலந்திருப்பதால், துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அந்தக் கழிவுகளை கால்நடைகள் உண்பதால் அவற்றுக்கு நோய் பரவி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
கரோனா தொற்றின் இரண்டாம்அலை வேகமாக பரவி வரும் நிலையில், திறந்தவெளி குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் தேங்கியுள்ள மழைநீரால் கொசு உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குப்பையை பாதுகாப்பான முறையில் கொட்டவும், அவற்றை உடனடியாக தரம் பிரித்து அப்புறப்படுத்தவும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.