கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, 3 சிறுவர்களை போக்ஸோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு பொது இடத்தில், நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் சைக்கிள் ஓட்டி பழகிக் கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள், அந்த சிறுமியை கேலி கிண்டல் செய்தனர்.
இதையடுத்து அந்த சிறுமி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். அப்போது அந்த 3 சிறுவர்களும், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், 3 சிறுவர்களையும் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸில் ஒப்படைத்தனர். பின்னர், இந்த வழக்கு மத்தியப் பகுதி அனைத்து மகளிர் போலீஸாருக்கு மாற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மூன்று சிறுவர்கள் மீதும் புகார் அளித்தார்.
அதன் பேரில், மத்தியப் பகுதி மகளிர் போலீஸார், 17 வயது, 15 வயது, 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் மீதும் போக்ஸோ, பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். இதையடுத்து மூன்று சிறுவர்களையும் கைது செய்த போலீஸார், அவர்களை கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.