ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலானவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளதால் வீடுகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். ஆக்சிஜன் வழங்குதல் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பிற அரசு மருத்துவமனைகள், பெரிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வழங்கும் வசதி உள்ளது. தேவையான அளவு ஆக்சிஜனும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மாவட்டத்தில் திருமண மண்டபம், பள்ளி, கல்லூரி விடுதி என 11 இடங்களில், ‘கரோனா கேர் சென்டர்' அமைத்து, தொற்று பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்விடங்களில் 150 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.