கரூர்: மகாதானபுரம் ஊராட்சி 2019-20-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூலம் நாட்டில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் சிறந்த ஊராட்சி அமைப்புகளுக்கான தேசிய விருதுகள் 4 பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்பட்டு விருதுத்தொகை வழங்கப்படும். இதில் பொதுப்பிரிவான தீன்தயாள் உபத்யாய் பஞ்சாயத் சஷக்திகரன் புரஸ்கார் (டிடியுபிஎஸ்பி) பிரிவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி, இரு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 6 ஊராட்சிகளுக்கு விருது மற்றும் விருது தொகை வழங்கப்படும்.
கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான தேசிய ஊராட்சி விருது 4 பிரிவுகளின் கீழ் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மகாதானபுரம் ஊராட்சி தீன்தயாள் உபத்யாய் பஞ்சாயத் சஷக்திகரன் புரஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ளது.
தேசிய பஞ்சாயத்து ராஜ் நாளான ஏப்.24-ம் தேதி இவ்விருதுகள் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகாதானபுரம் ஊராட்சி சுகாதாரம், நிர்வாகம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.