திருச்சி விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தது. அதில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் மத்தியவருவாய் நுண்ணறிவுப் பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள், சிங்கப்பூர் விமானம் வந்து சேருவதற்கு முன்பாகவே திருச்சி விமானநிலையத்தை அடைந்தனர்.
விமானம் வந்தவுடன் அதில்இருந்து இறங்கிய பயணிகள்,பணியாளர்களை சோதனையிட்டனர். அப்போது 8 பயணிகள், தங்களது உடல் மற்றும் உடைமைகளுக்குள் மறைத்து 7.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த டிஆர்ஐ அதிகாரிகள், பிடிபட்ட 8 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல விமானநிலையத்துக்கு வெளியே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த திருச்சி மேலசிந்தாமணி காயிதே மில்லத் காலனியைச் சேர்ந்த நாகூர் மீரான்(39), சேக் உஸ்மான்(35) ஆகியோரை விமானநிலைய இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீஸார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடமிருந்து தலா 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கம் யாருடையது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.