நாமக்கல் நகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 200 வீடுகளுக்கு மாநகராட்சியின் களப்பணியாளர்கள் நேரடியாகச் சென்று, அப்பகுதியில் குடியிருப்போர் அனைவரின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
முகாமில் சளி பரிசோதனை மட்டுமின்றி கபசுரக்குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. நேற்று ஏஎஸ். பேட்டை மற்றும் சந்தைப்பேட்டைக்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சி களப்பணி யாளர்கள், வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளில் ஈடுபடுகின்றனர்.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் இரு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் சிறப்பு சளி பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு தினமும் 150-க்கும் மேற்பட்டோருக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது. வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில், துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மருத்துவர்கள் சர்மிளா, சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.