சேலத்தில் கடந்த இரு நாட்களாக கோடை மழை பெய்ததால், வெயில் உஷ்ணம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. இந்நிலையில், காற்றழுத்த சுழற்சியின் காரணமாக சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த இரு நாட்களாக கோடை மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி பூமி குளிர்ச்சி அடைந்தது.
சேலத்தில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இடி, பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது. சேலம் புதிய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.
நேற்று மதியம் 3 மணியில் இருந்து 4 மணி வரை அம்மாப்பேட்டை, டவுன் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பகலில் வெயில் அதிகளவு இருந்தாலும், மதியம் பெய்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், உஷ்ணம் தணிந்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சேலம் 28, கரியகோயில் 18, ஆணைமடுவு 3, ஏற்காடு 2.4, மேட்டூர் 2.4, வாழப்பாடி 2, எடப்பாடி 2 மிமீ மழை பாதிவானது.