ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறியது தொடர்பாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
விதிமுறைகளை மீறுவோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இதன்படி இரவு நேர ஊரடங்கின் முதல் நாளில் ஈரோடு மாவட்டத்தில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 2-வது நாள் ஊரடங்கில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 4 நாட்களில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, என ஈரோடு மாவட்ட காவல் துறையினர் தெரிவித்தனர்.