தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே ஸ்டெர் லைட் ஆலை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள்: என்.ராஜேஷ் 
TNadu

ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா? - தூத்துக்குடி கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு : எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் மோதல், கல்வீச்சால் பரபரப்பு

ரெ.ஜாய்சன்

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் ஸ்டெர்லைட் ஆலைவளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே மோதல், கல்வீச்சும் நடைபெற்றது. இதில் ஒரு பெண் காயமடைந்தார்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாமல், நாடு முழுவதும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி கோரியும், உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் வேதாந்தாநிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கோரியது.

ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி பகுதி மக்களின் கருத்துகளை அறிவதற்காக, தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று அவசர கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 14 பேர், ஆதரவாளர்கள் 6 பேர் அழைக்கப்பட்டனர்.

காலை 7.30 மணிக்கே ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் குவிந்தது. பாரபட்சமின்றி அனைவரையும் அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, அமமுக உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சுமார் 100 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மேலும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

ஆட்சியர் விளக்கம்

தொடர்ந்து பேசிய பலரும், `ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அதை பயன்படுத்தி குறுக்குவழியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்நிறுவனம் முயற்சி செய்யும். ஸ்டெர்லைட் ஆலையை எந்நிலையிலும் திறக்கக் கூடாது’ என வலியுறுத்தினர்.

`ஆக்சிஜன் நிலையத்தை தமிழகஅரசே ஏற்று நடத்தினால் அனுமதிக்கலாமா?’ என ஆட்சியர் கேட்டார். அதற்கும் அனுமதிக்கக் கூடாது என பலரும் கூறினர்.அப்போது ஒருவர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேச முயற்சிக்க,மற்றவர்கள் கூச்சல் போட்டதுடன்,அவரைத் தாக்க முயன்றனர். அவர்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அதன் பின்பு, ஆதரவாளர்கள் யாருமே கூட்டத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.

அழிக்க வேண்டும்

`மக்களின் கருத்துகள் அரசுக்கு தெரிவிக்கப்படும்’ எனக் கூறி கூட்டத்தை ஆட்சியர் நிறைவு செய்தார். அதன் அடிப்படையில் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பான அறிக்கையை ஆட்சியர் உடனடியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

மோதல், கல்வீச்சு

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டன. ஆதரவாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கல்வீச்சில் ஆதரவாளர் தரப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வரும்போதும், ஆதரவாளர்களைப் பார்த்து, எதிர்ப்பாளர்கள் ஆவேசமாக கத்தினர். அப்போதும் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்ப்பாளர்கள் பலர் பகல் 12 மணி வரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால், வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டதை அறிந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர். பகல் 12 மணிக்கு பிறகே ஆட்சியர் அலுவலக வளாகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

SCROLL FOR NEXT