சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள புளியம்பட்டி ஈசன் ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் தங்கமணி (59). தறி உரிமையாளர். இவரது மனைவி ரத்தினம் (49). இவர்களது மகன் ராஜா (28). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜாவுக்கு மகுடஞ் சாவடியில் பெண் பார்த்து பெற்றோர் நிச்சயம் செய்தனர். நிச்சயமான பெண்ணுடன் ராஜா செல்போனில் பேசி வந்துள்ளார்.
இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்ணை பிடிக்கவில்லை என்று ராஜா பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக பெண் வீட்டாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் தங்கமணி வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் முடிவு தெரிவிப்பதாக தங்கமணி-ரத்தினம் தம்பதி பெண் வீட்டாரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று காலை (23-ம் தேதி) தங்கமணியின் இரண்டாவது மகள் சுகன்யா வீட்டின் மாடியில் இருந்து கீழே வந்துள்ளார். அப்போது, தங்கமணி-ரத்தினம் தூக்கில் இறந்து தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து வந்த மகுடஞ்சாவடி போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
விசாரணையில், மகன் நிச்சயமான பெண்ணை பிடிக்க வில்லை என்று கூறியதால், மன வேதனை அடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.