ஈரோட்டில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம் விதித்து, கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரையில் 4 லட்சத்து 82 ஆயிரத்து 637 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 22-ம் தேதி வரை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 25 பேர் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கரோனா தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது, என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் சாலை ஆணைக்கல்பாளையத்தில் அரசின் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத பேக்கரி, தேநீர் கடை, துரித உணவகம் உள்ளிட்ட 4 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதித்த ஆட்சியர், அவற்றை மூட உத்தரவிட்டார்.