சேலத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கரோனா தொற்று தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்திட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டோக்கன் வழங்கி மக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒருநாளைக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 478 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, சேலம் மாநகராட்சி பகுதிகளில் தொற்று பாதித்த 62 பகுதிகள் கண்டறிந்து, தகர தடுப்பு போடப்பட்டு, சம்பந்தப்பட்ட மக்கள் வெளியே வராமல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று திரளாக வந்து பொதுமக்கள் தடுப்பூசி போட காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மருத்துவ பணியாளர்கள் டோக்கன் வழங்கி, அவர்களை வரிசையாக வரவழைத்து தடுப்பூசி போட்டனர்.
அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போட வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன்படி தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.