TNadu

பவானிசாகரில் பயிற்சியில் இருந்த 5 டிஎஸ்பிக்களுக்கு கரோனா :

செய்திப்பிரிவு

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெற்று வந்த 5 டிஎஸ்பிக்களுக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற டிஎஸ்பிக்கள் 25 பேருக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிகள் நேற்று (22-ம் தேதி) முடிவடைய இருந்த நிலையில், பயிற்சி பெற்றவர்களில் சிலருக்கு காய்ச்சல், தலைவலி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 டிஎஸ்பிக்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியில் இருந்த மற்ற டிஎஸ்பிக்கள், பயிற்சி நிலைய முதல்வர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பயிற்சி நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்புப் பணி முடிந்து மீண்டும் பயிற்சியைத் தொடர வந்தபோது, அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT