Regional03

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு - உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும் : அரசுக்கு கொமதேக ஆலோசனை

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு, பொதுமக்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டுமென கொமதேக வலியுறுத் தியுள்ளது.

இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா தொற்று பரவலின் வேகத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. கரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் பாதையை சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை. கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு முயற்சி எடுக்கிறதே தவிர, கரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்தவொரு முயற்சியும் இதுவரை எடுக்காமல் உள்ளது.

ஒருபுறம் தடுப்பூசி இருந்தாலும் கூட மற்றொருபுறம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பையும், பாதிப்பையும் கட்டுப்படுத்த முடியும்.

பொதுவாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு கரோனாவினால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. சித்தா மற்றும் ஆயுர்வேதா முறைகளில், எந்தவொரு பக்கவிளைவும் இல்லாமல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் எந்தவொரு முக்கியத்துவமும் கொடுக்காமல் தமிழக சுகாதாரத் துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கரோனா பரவுவதைத் தடுக்க போடப்படும் கட்டுப்பாடுகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்ட முன்வர வேண்டும். தமிழக சுகாதாரத் துறையில் தனிப்பிரிவை உருவாக்கி தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT