கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசனசபை நிர்வாகிகள் தண்ணீர் திறந்து வைத்தனர். 
Regional01

தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் - கொடிவேரி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு :

செய்திப்பிரிவு

கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு நேற்று நீர் திறக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொடிவேரியில், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையின் இரு கரைகளிலும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்கள் உள்ளன. வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் நேரடி பாசனம் பெற்றுவருகிறது. கொடிவேரி முதல்போக பாசனத்துக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நீர் திறக்கப்படுவது வழக்கம். தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் நடைபெற்று வந்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினால் தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் 35 சதவீதம் முடிவுற்ற நிலையில், முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என கொடிவேரி அணை பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாசனத்துக்கு நீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதன்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசன விவசாயிகள் முன்னிலையில் கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசன வாய்கால்களுக்கு முதல் போக நஞ்சை சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல்கட்டமாக தடப்பள்ளி வாய்க்காலுக்கு விநாடிக்கு 200 கனஅடியும், அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலுக்கு விநாடிக்கு 100 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்களில் முதல் போக நஞ்சை சாகுபடிக்கு 120 நாட்களுக்கு திறக்கப்பட்டுள்ள நீரால், கோபி, அந்தியூர், பவானி ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனம் பெறவுள்ளது.

SCROLL FOR NEXT