சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் தருண் போட்டியிட்டார். இவர் ரெட்டியூர், அழகாபுரம் ஆர்டி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (21-ம் தேதி) டாக்டர் தருண் குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். நேற்று காலை வீட்டின் பின்புறம் பைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறிய சத்தம் கேட்டு, தருண் சென்று பார்த்துள்ளார்.
குழாயில் பொருத்தப்பட்டிருந்த நான்கு பித்தளை பைப்புகள் உடைத்து எடுக்கப்பட்டு தண்ணீர் வெளியேறி கொண்டிருந்தது. மேலும், வீட்டின் பின்புறம் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராவும் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது.
தகவல் அறிந்து வந்த அழகாபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதம் செய்து, பித்தளை பைப்புகளை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.