பேராவூரணி அருகே போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள அழகியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் அன்புரோஸ்(45). அழகியநாயகிபுரம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினராக உள்ள இவர், பட்டுக்கோட்டையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவரது தம்பி சகாயராஜ் வெல்டிங் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், பைனான்ஸ் தொழில் சம்பந்தமாக சகாயராஜின் வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்ற தில்லங்காட்டைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், சகாயராஜின் மனைவியிடம் செல்போன் எண்ணைக் கேட்டு தொந்தரவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சேதுபாவாசத்திரம் போலீஸில் நேற்று முன்தினம் இரவு சகாயராஜ் தம்பதியர் புகார் அளித்தனர்.
இதையறிந்த லட்சுமணன், தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனங்களில் சகாயராஜின் வீட்டுக்குச் சென்றார். அப்போது, அங்கிருந்த சகாயராஜின் அண்ணன் அன்புரோஸிடம் தகராறு செய்த அவர்கள், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த அன்புரோஸை உறவினர்கள் மீட்டு, அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புரோஸ் உயிரிழந்தார். இதுதொடர்பாக, சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அன்புரோஸின் உறவினர்கள் அழகியநாயகிபுரத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, அனுப்பிவைத்தனர். அன்புரோஸ்க்கு லீலாஜோஸ்பின் என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.