கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக, காட்பாடியில் உள்ள தெருக்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்த மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன். 
Regional01

கரோனா பரவல் அதிகரிப்பால் - வேலூர் மாநகராட்சிக்கு 12 ஆயிரம் டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு : 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பு

செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சிக்கு 12 ஆயிரம் டோஸ் கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளுக்கு நாள் கரேனா தொற்று அதிகமாக இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்றின் போது அதிகபட்சமாக 282 பேர் பாதிக் கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை கரோனா இரண்டாம் அலை கடந்துள்ளது. நேற்று முன்தினம் 297 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று அதிகபட்ச அளவாக 336 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதில், வேலூர் மாநகராட்சியில் மட்டும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. மேலும், மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 750-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளான குடியாத்தம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, செதுவாலை உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் 40 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் சராசரியாக 6 ஆயிரம் பேர் அளவுக்கு தடுப்பூசியை போட்டு வந்தனர். இதற்கிடையில், கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டன. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வத்துடன் வந்தாலும் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

மாநகராட்சிக்கு அதிகம்

வேலூர் மாநகராட்சி பகுதிக்கு அதிக கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நேற்று 10 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் 2 நாட்களில் தீர்ந்துவிட வாய்ப்புள்ளதால் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT