சேலம் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி உழவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் பங்குனி, சித்திரை மாதங்களில் பெறப்படும் கோடை மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வது மிக அவசியம். கோடை உழவால் மண்ணின் கடினமான மேற்பரப்பு உடைக்கப்பட்டு துகள்களாகிறது. இதனால், நிலத்தில் நீர் இறங்கும் திறன் உயரும். நிலத்தை அடுத்தடுத்து உலர வைப்பதாலும், குளிர்விப்பதாலும் மண்ணின் கட்டமைப்பு மேம்படுகிறது.
மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கிறது. வயலில் உள்ள களைகள் குறிப்பாக கோரை போன்றவை மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகிறது. கோரைக் கிழங்குகளை கைகளால் சேகரித்தும் அழிக்கலாம்.
நிலத்தின் அடியில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் கோடை உழவு செய்வதால் வெளியில் கொண்டு வரப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டும், பறவைகளால் உண்ணப்பட்டும் அழிக்கப்படுகின்றன.
அறுவடை செய்யப்பட்ட வயல்களின் முந்தைய பயிரின் தாள்கள், வேர்கள் மற்றும் தட்டைகள் போன்றவை கோடை உழவின் போது மடக்கி உழப்படுவதால் மண்ணின் அங்ககச் சத்து அதிகரிக்கிறது. இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மண்வளம் மேம்படுகிறது.
மேலும், கோடை மழையை பயன்படுத்தி தேவையான நீர் கண்மாய்களில் இருக்கும் பட்சத்தில் குறுகிய நாட்கள் கொண்ட பயறு மற்றும் சிறுதானிய பயிர்களை பயிரிட்டு பயன்பெறலாம். சிறுதானிய பயிர்களான கேழ்வரகு, கம்பு மற்றும் சோளம், குறுந்தானியங்களான குதிரை வாலி, வரகு, தினை போன்ற பயிர்களையும் பயறு வகைகளில் உளுந்து, தட்டைபயறு மற்றும் பாசிப்பயறு ஆகிய பயிர்களையும் பயிரிட்டு, கோடையிலும் மகசூல் பெற்று பயனடையலாம்.
இதுதொடர்பாக தொழில்நுட்ப அறிவுரைகள் பெற சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.