சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே ஏ.கருங்குளம், உசிலங்குளம், தெற்குப்பட்டி, நாவற்கணியான்மடம், வில் வாம்பட்டி உள்ளிட்ட கிரா மங்களைச் சேர்ந்த மக்கள், சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.குண சேகரன், மாவட்டச் செயலாளர் கண்ணகி தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் உசிலங்குளம் கண்மாய் மூலம் 5 கிராமங்களைச் சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால் 15 ஏக்கர் கண்மாய் நீர்பிடிப்பு நிலம், 6 வரத்துக் கால்வாய்கள், 7 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என 40 ஏக்கர் வரை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் அவர் மூன்று கி.மீ வரை தெற்குப்பட்டி-மாத்துக்கண்மாய் சாலை, விளைநிலங்களுக்கு செல்லும் பாதைகளை மறைத்து கம்பி வேலி அமைத்துள்ளார். இதனால் 150 ஏக்கர் நிலத்துக்கு விவசாயிகள் செல்ல முடியாமல் தரிசாக விடப்பட்டுள்ளன. அவர் பூமிதான இயக்க நிலத்தில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியுள்ளார். ஆக்கிரமிப்பு குறித்து 15 ஆண்டுகளாக புகார் கொடுத்து வருகிறோம். கடந்த 2008-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் பிறகும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.