சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கவுசல்யா(23). தமிழக காவல்துறையில் கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம்நிலை காவலராக தேர்வு செய்யப்பட்ட இவர், திருச்சி கே.கே.நகரிலுள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, மாநகர ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே இவருக்கும், ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் காதலை ஏற்றுக் கொள்ள கவுசல்யாவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். எனவே அந்தக் காவலர் கடந்த மாதம் தனது உறவுப்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இதனால் விரக்தியில் இருந்த கவுசல்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத் தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.